Director: Venkat Prabhu Actors: Suriya, Nayantara, Pranitha, Premgi Amaren, Parthiban

Massu-Movie-Review

பெருங்குழப்பம். இல்லை. "மாஸ்" அல்லது "மாஸூ" அல்லது "மாசு என்கிற மாசிலாமணி" என படத்தின் பெயரைப் பற்றி அல்ல. வழக்கம்போல படத்தின் நிறைகுறைகளை அலச வேண்டுமெனில் எங்கு தொடங்குவது எனத் தெரியவில்லை. நிறைகளை முதலில் சொன்னால் ஒரே பத்தியில் முடிந்து விடும். குறைகளை முதலில் சொன்னால் எடுத்தவுடன் குறைகளா என்ற எண்ணம் ஏற்பட்டு விடலாம். சரி எப்படியும் குறைகளை இரண்டாவதாகச் சொன்னாலும் மூன்று பத்திகளுக்கு மேல் சொல்வது பெரும் பிரயத்தனம்.

வலு:
படத்தில் ஆங்காங்கே மேகமூட்டத்துக்கிடையே தென்படும் நகைச்சுவை காட்சிகள். வழக்கமான வெங்கட் பிரபு படங்கள் போல பிரேம்ஜி செய்யும் காணச் சகியாத சேட்டைகளை மட்டுமே தவிர்த்து கருணாஸ், மனோபாலா, பிரம்மானந்தம், ஸ்ரீமான், ராஜேந்திரன், பார்த்திபன் ஆகியோரும் இருப்பது மிகப் பெரிய ஆறுதல். அதோடு நகைச்சுவையின் சாரம் காட்சிகளின் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் இருப்பதும் பிரேம்ஜியின் வழக்கமான கொடும் மொக்கைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றுகிறது.

இவ்வளவு தான்:
படத்தில் மதிக்கத்தக்க விதத்தில் மிச்சமிருக்கும் ஒரே விஷயம் கதை. திகில் படம் என்றதும் ஒரு பங்களாவில் பேயிருக்கும், அங்கு செல்லும் மனிதர்கள் சந்திக்கும் தருணங்கள் என்ற template-ல் இருந்து விலகி புதுமையான களத்தைத் தேர்ந்தெடுத்திருப்பது பாராட்டுக்குரியது. திரைக்கதையில் ஆங்காங்கே நமக்குச் சொல்லியும் சொல்லாமலும் சில முடிச்சுக்களை போட்டு பின்னர் படம் முடிவை நோக்கி நகர்கையில் ஒவ்வொன்றாய் அவிழ்க்கும் தருணங்களும் ஈர்க்கின்றன.

அவ்வளவு தான். மற்றபடி இந்த அவ்வப்போது வரும் தருணங்களுக்காக ஒவ்வொரு முறையும் 15-20 நிமிடங்கள் கொடுமையான அணுகுமுறை கொண்ட காட்சிகளை நாம் கடந்து செல்லும் அனுபவமே 'மாசு'. இது முழுக்க முழுக்க தமிழ் சினிமாவின் ஜனரஞ்சக ரசிகர்களுக்கான படம் என்ற நோக்கத்துடன் களத்தில் இறங்கியிருப்பது தெரிகிறது. ஆனால் அந்த நோக்கத்தைச் செயலாற்றும்பொழுது மக்களுக்கு தரமான 'மசாலா' படத்தைக் கொடுக்கும் நேர்மை சிறிதளவேனும் இருந்ததா? எந்தவொரு காட்சியிலும் என்ன நடக்கிறது, பிரேமில் நடிகர்கள் நிற்கும் இடம் என்ன, அவர்களைச் சுற்றி இருக்கும் பொருட்கள் எங்கிருக்கின்றன, அந்தந்த காட்சி நடைபெறும் இட அமைவு எதுவுமே தெளிவாயில்லை. பின்னர் எப்படி நாம் திரையில் நடப்பதை புரிந்து கொள்ள முடியும்? கவலை இல்லை. வசனங்கள் அந்தப் பிரச்சினையைத் தீர்க்கின்றன. உதாரணத்திற்கு ஒரு பெண் மோதிரத்தைக் கழற்றி கொடுப்பது போன்ற காட்சி எனில் அவளே அதனைச் சொல்லியும் விடுகிறாள்- "இந்தா... நீ கொடுத்த மோதிரத்தை நீயே வச்சுக்கோ"- இந்த வசனங்களும் மிக மிக அடிமட்ட கிளிஷே தன்மையுடன் விளங்குவதால் புரிதலில் எந்தக் குழப்பமும் இருக்காது.

ஸ்டண்ட் அமைத்த விதத்திலும் இந்த மேலோட்டமான போக்கு தென்படுகிறது. பழி வாங்கும் கதையமைப்பு கொண்ட திரைப்படங்களின் பலம் பார்வையாளனும் சண்டைக் காட்சிகளில் உள்ளே புகுந்து வில்லன்களை வெளுத்து வாங்க நினைக்குமளவு தாக்கத்தை ஏற்படுத்துதல். ஆனால் இந்தப் படத்தில் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை சண்டைக் காட்சிகள் வந்தாலும் அவையனைத்துமே தட்டையாக "டிஷ்யூம் டிஷ்யூம்" என முஷ்டி சண்டையாகவே இருக்க, கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி நம்மை 1960-களுக்கே அழைத்துச் செல்கிறது. ஹீரோ திடீரென அத்தனை வில்லன்களையும் ஒரே இடத்தில்- கரும்புத் தோட்டம், ஒரு மிகப்பெரிய மோட்டார் கேரேஜ், கண்டெய்னர்கள் நிரம்பிய துறைமுகம் என 80 வருட தமிழ் சினிமாவின் சம்பிரதாய கிளைமாக்ஸ் லொக்கேஷனில்- சந்திக்க, வில்லன்களை கூடைப்பந்து போல தரையில் அடித்து எம்பி எழச் செய்து, பின்னர் பந்தாட, மற்றொரு புறம் படத்தின் ஒட்டுமொத்த நகைச்சுவைக் கதாபாத்திரங்களும் மற்ற அடியாட்களுடன் உருண்டு புரண்டு காமெடிச் சண்டை போட்டுக் கொள்ள, ஆம், காலயந்திரம் இல்லாமல் நாம் 1960-களுக்குச் செல்கிறோம். நல்லவேளையாக திடீரெனெ ஒரு துப்பாக்கி வெடித்து, ஒரு போலீஸ்காரர் உள்ளே நுழைந்து, சுற்றிக் கட்டப்பட்ட வைக்கோல் கட்டு போல ஒன்றாகக் கட்டப்பட்டிருக்கும் வில்லன்களை "யூ ஆர் அண்டர் அரெஸ்ட்." என்று சொல்லி இழுத்துச் செல்வாரோ என்ற பயம் ஏற்பட்டு பின்னர் கலைகிறது. படத்தில் நயன்தாரா மொத்தமாக 7 காட்சிகள் வந்தால் அதிகம். பின்னணியில் அச்சுப் பிசகாமல் மங்காத்தா, பிரியாணி-ல் கேட்ட அதே இசை. ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் 25-ஆவது படம், படத்தொகுப்பாளர் பிரவீன்.K.L. 50-ஆவது படம் என்று டைட்டிலில் காண்பிக்கப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் பிசிறு. எடிட்டர் பிரவீன், நம்மை படத்தை ரசிக்க விடாமல் செய்த வில்லனா அல்லது தாறுமாறாக எடுக்கப்பட்ட காட்சிகளை இழுத்துப் பிடித்து முக்கி முனகி ஒரு முழுநீளப் படமாக ஆக்கி படத்தைக் காப்பாற்றிய ஆபத்பாந்தவனா எனத் தெரியவில்லை. பல்வேறு காட்சிகளில் 'சக்தி' சூர்யாவின் க்ளோஸ்-அப் மட்டும் சம்பந்தமே இல்லாமல் காட்டப்படுகிறது, கிராபிக்ஸில் சேர்க்கப்பட்ட பொம்மைப் பின்னணியுடன். செண்டிமெண்ட் காட்சிகளில் விக்கிரமன் படம் போல உச்சபட்ச மெலோடிராமா. காட்சியமைப்பு அத்தனையும் template. அனாதைக் குழந்தைகள் என்றால் பழுப்பேறிய பனியன் அணிந்து கொண்டு ஒரே பொட்டலத்திலிருந்து சாப்பிட வேண்டும்; ஒருவருக்கு நன்றி கூற விரும்பினால் தலையை 30 டிகிரி கோணத்தில் சாய்த்து வைத்து கைகூப்பி, கண்ணீர் வழிய நிற்க வேண்டும். கதாநாயகன் என்றால் ஏதேனும் வித்தியாசமாக சேஷ்டைகள் செய்தே ஆக வேண்டும். சூர்யா ஒரு காதில் 'சேஃப்டி பின்' குத்திக் கொண்டிருக்கிறார். (இப்போதெல்லாம் சூப்பர் மேன் கூட உள்ளாடையை உள்ளே அணியத் தொடங்கி விட்டார்). சமயங்களில் இது 2010-ல் சிவா நடித்து வெளியான 'தமிழ்ப் படம்' போல ஒரு spoof படமா என்ற சந்தேகம் எழலாம்.

கொஞ்சம் பிரயத்தனம்:
"மாஸ்" என்னும் வார்த்தை வெகுஜனத்தைக் குறிக்கிறது. இந்த மந்தை மனப்பான்மையின் நாடியை- என்னம்மா இப்படி பண்ணுறீங்களேமா, கத்தி பட இசை, மொட்டை ராஜேந்திரன், பழைய சூர்யா-அஜித் பட வசனங்கள், மனோபாலா, "காஞ்சனா" ஸ்ரீமான், மோக்கா மோக்கா விளம்பரம், ஈழத் தமிழன்- எதைத் தொட்டால் தமிழ் ரசிகன் படத்திலுள்ள அத்தனை தாங்க முடியாத அறுவைகளையும் பொறுத்துக் கொண்டு ஒரு மந்தையாய் கலந்து "மாஸ் மாஸ்" என கூச்சல் போடுவான் என்பதை வெங்கட்பிரபு மிகச் சரியாகத் தெரிந்து வைத்திருக்கிறார். குறைந்த பட்சம் சூர்யா பேசும் ஈழத் தமிழிலாவது கவனம் செலுத்தியிருக்கலாம். மிக மிகச் சராசரியாக நாம் இங்கு பயன்படுத்தும் பேச்சு வழக்கில் அவ்வப்பொழுது "எண்டு, செண்டு, வண்டு, கதைக்கிறேன்" என்று சேர்த்து விட்டு சூர்யாவும் வெங்கட் பிரபுவும் ஈழத் தமிழனை உருவாக்க முயல்கிறார்கள். ஒன்றுமே இல்லாத விஷயத்தை வைத்து சற்றும் பிசிறடிக்காத பொழுதுபோக்குப் படங்களைத் தருவதே வெங்கட்பிரபுவின் தனித்தன்மை. ஆனால் இம்முறை ஒரு ஆழமான கதையமைப்பு கொண்டு 'ஒரு திரைப்படம்' என்றே சொல்லவியலாத ஒரு 'வீடியோ கலவையை' அளித்திருக்கிறார்.

மேலும் வெங்கட்பிரபு படங்களின் மிகவும் தனித்தன்மை வாய்ந்த இடம் படம் முடிவுறும் காட்சி, படத்தின் கடைசி பிரேம்- இந்தப் படத்தில் அது ராமநாராயணன் பட முடிவு போல ஆகியிருப்பதை என்னவென்று சொல்ல? கதாநாயகர்களின் கனத்தை நம்பாமல் வெங்கட்பிரபு எடுத்த "சென்னை-28, கோவா" போன்ற படங்கள் ஒரு cult. கதாநாயகனை மையப்படுத்தி எடுத்த "மங்காத்தா" ஒரு cult. இப்படி டிரெண்ட்செட்டர் ஆக விளங்கிய வெங்கட்பிரபு, கடைசியில் ஹரி, பேரரசு, கே.வி.ஆனந்த், விக்கிரமன் ஆகியோரின் பாணியைப் பின்பற்றி, தனது படைப்பாற்றலில் இருந்து விலகி நிற்பது கவலையளிக்கிறது.

இந்தப் படம் யாருக்கு?
நல்ல மசாலா படம் என்பது உங்கள் எதிர்பார்ப்பாக இருந்தால் ஆங்காங்கே சில இடங்களில் அவ்வகையிலான தருணங்கள் உங்களுக்குக் கிடைக்கலாம். 'மசாலா' படம் என்பதே பல சமரசங்களுடன் எடுக்கப்படும் திரைப்படம் தான். மசாலா படங்களுக்குண்டான பண்புகளிலேயே சமரசம் செய்து கொண்டு மிகவும் மேலோட்டமான போக்குடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, பார்வையாளனாக நீங்களும் உங்கள் தேவைகளில் சமரசம் செய்து கொண்டு ரசிக்கத் தயாராக இருந்தால் இது உங்களுக்கான படம். ஆங்காங்கே சில நகைச்சுவைக் காட்சிகள், கதையில் சில சாதுரியமான இணைப்புகள், தமிழ் சினிமாவின் பிரபலமான படங்கள், கதாபாத்திரங்களை நினைவுபடுத்தும் காட்சிகள் ஆகியவற்றைத் தவிர்த்து ஒரு முழு நீளத் திரைப்படமாக முழுமையான பொழுதுபோக்கை அளிக்கும் படமாக இருக்குமா என்பது உங்கள் பெருந்தன்மையின் அளவைப் பொறுத்தது.

Genre : 

, ,

About Author

Mahesh Raghavan

Mahesh Raghavan is a film buff and independent short filmmaker from Chennai. His interest for films of all genres and languages has grown over the years. One film a day is his thumb rule.

Rate this Movie

0 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 50 votes, average: 0.00 out of 5 (0 votes, average: 0.00 out of 5)
You need to be a Login to rate this Movie.
Loading ... Loading ...

Leave a Reply

You must be logged in to post a comment.

Login With Your Social Account